

நடிகை சமந்தாவின் பெயர், படம் மற்றும் குரலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களை நீக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ, புகைப்படம், குரல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக தங்கள் அடையாளத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்துத் திரை பிரபலங்கள் வழக்குத் தொடுத்து வருகின்றனர். நீதிமன்றம் அதைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தாவும் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் அவரது ஆளுமைத் தன்மைகளைத் தவறாகப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட டீப்ஃபேக் மற்றும் இதர அனுமதியற்ற உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி மாதவ் ஜம்தார் முன் விசாரணைக்கு வந்தது. அவரது பெயர், படம் மற்றும் குரலைப் பயன்படுத்தி வெளியிடப்படும் அனுமதியற்ற உள்ளடக்கங்களை வெளியிடவும், தொடர்ந்து பயன்படுத்தவும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.