

என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று ‘பைக்கர்’ விழாவில் ஷர்வானந்த் பேசினார்.
ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’. அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் தமிழ் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
‘பைக்கர்’ படக்குழுவினர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்வில் ஷர்வானந்த் பேசும் போது, “‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன்.
என் திரையுலகப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.
இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது” என்று பேசினார் ஷர்வானந்த்.