

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களான விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன் லால் ஆகிய 4 முன்னணி நடிகர்களையும் ஒரே திரையில் கொண்டுவந்து ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புரமோ வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் 4 மொழிகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி களும் செப். 6 அன்று ஒரே நாளில் தொடங்க உள்ளதை முன்னிட்டு இந்த புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உணவுகளைக் கொண்டாடும் வகையில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், பிக் பாஸ் தொடக்க விழாவுக்கான தளத்தை அமைத்துள்ளது.
இதுபற்றி ஜியோஸ்டார் (தெற்கு) பொழுதுபோக்கு பிரிவின் தலைவர், கிருஷ்ணன் குட்டி கூறும்போது, “எங்களது 4 தொகுப்பாளர்களும் தங்களது ரசிகர்களுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற இந்த பிணைப்பே முக்கிய காரணம்.
விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப் மற்றும் மோகன்லால் ஆகியோரை தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ப, அவர்களின் இயல்பு மாறாமல் ஒன்றாகக் கொண்டுவர இந்த விளம்பரம் எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவர்கள் நால்வரையும் ஒரே திரையில் காண்பது ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணம். 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ள இந்த பிரம்மாண்டமான நிகழ்வை இந்த விளம்பரம் மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது” என்றார்.