

நிவின் பாலி - மமிதா பைஜு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள மலையாளத் திரைப்படம், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இதில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன், ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.300 கோடியை வேகமாக வசூலித்த மலையாளத் திரைப்படம் என்ற புதிய மைல்கல்லை ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படைத்துள்ளது.
இந்தப் படம் வெளியாகி 28-வது நாளிலும், கேரளாவில் 266 திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படமான ‘லோகா சாப்டர் 1-சந்திரா’ ரூ. 300 கோடி வசூலை ஈட்ட 45 நாட்கள் எடுத்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ 24 நாட்களிலேயே அந்த இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.