

நடிகர் அல்லு அர்ஜுன், இப்போது அட்லி இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து அவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் கூட்டணி இதற்கு முன் 4 படங்களில் இணைந்துள்ளது. இவர்களின் ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டதுடன் நல்ல வசூலையும் பெற்றது.
இந்நிலையில் இவர்கள் இணையும் புதிய படம், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. பிப்ரவரி 2027-ல் வெளியிடத் திட்டமிடப் பட்டுள்ள இப்படம் புராண காவிய கதையைக் கொண்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இது முருகனைப் பற்றிய படம் என்றும் அல்லு அர்ஜுன் பிசியானதால் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இக்கதையை த்ரிவிக்ரம் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அல்லு அர்ஜுனே நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.