

பிரபல தெலுங்கு ஹீரோ, பாலகிருஷ்ணா நடித்திருக்கும் படம், ‘அகண்டா 2’. போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா, பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிச.5-ம் தேதி வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி ‘அகண்டா 2’ திரைப்படம் வெளியாகாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு வலி மிகுந்த தருணம்.
படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு எப்படியான ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரச்சினையைச் சரி செய்ய அயராது உழைத்து வருகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்திருந்தது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தப் படத்தைத் தயாரித்த 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்தயாரித்த படங்கள் மூலம் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ரூ.28 கோடியைச் செலுத்த வேண்டியுள்ளது.
அதைக் கொடுத்துவிட்டுப் படத்தை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈராஸ் தொடுத்த வழக்கில் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ‘அகண்டா 2’ ரிலீஸ் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே பாலகிருஷ்ணா தனக்குத் தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய பாக்கி தொகையான ரூ.7 கோடியையும் இயக்குநர் போயபடி ஸ்ரீனு ரூ.4 கோடியையும் விட்டுக் கொடுத்தனர்.
இந்நிலையில், ஈராஸுக்கும் 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்துக்குமான பிரச்சினை பேசி முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து ‘அகண்டா 2’ திரைப்படம் நாளை (டிச.12) தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.