

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் துளசி.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில், ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குநர் சிவமணியை திருமணம் செய்துகொண்ட துளசிக்கு சாய் தருண் என்ற மகன் உள்ளார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த அவர், ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, சமீபத்தில் வெளியான ‘ஆரோமலே’ என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீர்டி சாய் பாபாவின் தீவிர பக்தையான இவர், டிச.31ம் தேதியுடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிச.31-ம் தேதி சீர்டிக்கு செல்கிறேன். அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாத்துடன் நிம்மதியாகத் தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.