

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. தமிழில் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்த இவர், இப்போது வெங்கடேஷின் ‘ஆதர்ஷ குடும்பம்’ என்ற தெலுங்கு படத்தில் இரு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ரூ.8 கோடி சம்பளம் கேட்டதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கே.ஜி.எஃப் படங்களின் வெற்றிக்குப் பிறகு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை, நான் சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள். நான் இதுவரை நடித்த திரைப்படங்களே மிகக் குறைவு. அப்படியிருக்கும் போது அவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாகக் கேட்க முடியும்? அதனால் அது வதந்திதான். ‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு அவசரப்பட்டுத் திரைப்படங்களை ஒப்புக் கொள்ளவில்லை.
பணம் சம்பாதிப்பது மட்டுமே எனக்கு நோக்கமாக இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளில் 30 முதல் 40 திரைப்படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், வெறும் பணத்துக்காகப் படங்களை ஒப்புக்கொள்ளாமல், நல்ல கதைக்கும் தரமான கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.