

நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் விலகினார். அவர் 8 மணி நேர வேலை உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதை ஏற்காததால் விலகியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க உள்ளனர். அதில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோரிடம் பேசி வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இப்போது சாய் பல்லவி, நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.