

தமிழில், கே பாக்யராஜின் வீட்ல விஷேசங்க, விஜயகாந்தின் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் பிரகதி.
பின்னர் குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். 49 வயதான அவர், சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு, டெட்லிஃப்ட் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், பெஞ்ச் மற்றும் ஸ்குவாட் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து ‘த்ரீ ரோசஸ் சீசன் 2’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை, படக்குழுவினர் கவுரவித்தனர். அப்போது பேசிய அவர், பவர்லிஃப்டிங்கில் தான் ஈடுபட்டபோது ஏராளமான கேலிகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “நான் உடற்பயிற்சியைத் தொடங்கும்போது, ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா? ஜிம்மிற்கு ஏன் இப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து செல்கிறீர்கள்? அதற்குரிய ஆடைகளைத்தான் அணிய வேண்டும்; புடவையோ, சுடிதாரோ அணிய கூடாது' என்று கிண்டல் செய்தனர். இதைக் கண்டு, ‘நான் ஏதும் தவறு செய்கிறேனா? ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளால் என்னைக் கேலி செய்கிறார்கள்?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளுடைய நண்பர்களும் இந்த கருத்துகளைப் பார்த்தால் என்னைப் பற்றியோ, என் மகளைப் பற்றியோ என்ன நினைப்பார்கள்? இதனால், பவர் லிஃப்டிங்கில் ஏதாவது சாதனை செய்வதன் மூலம் அந்த ட்ரோல்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் வென்ற பதக்கங்கள் அந்த ட்ரோல்களுக்கு பதிலாக இருக்கும்.
குறைந்தபட்சம் இப்போதாவது அவர்கள் கருத்து தெரிவிப்பதை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நான் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன். யாரும் எனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, திரைத்துறையில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் நான் பெற்ற பதக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.