

தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தனுஷுடன் ‘பட்டாஸ்’, வசந்த் ரவியின் ‘இந்திரா’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மெஹ்ரின் பிர்ஸாடா. இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், ரகசியமாகத் திருமணம் கொண்டதாக வதந்தி பரவி வந்தது. இதுபற்றி அவருடைய விக்கிப்பீடியாவிலும் மர்ம நபர்கள் பொய்யானத் தகவலை குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வதந்திகள் என்னைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் மவுனமாக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியான தொல்லைகள் காரணமாக இப்பதிவை எழுதுகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டதாகப் போலியான கட்டுரை வெளியானது.
அதன் மூலம் இரண்டு நிமிடப் புகழைத் தேடிக்கொள்ள முயன்ற மோசமான நபரின் வேலை அது. எனக்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை. நான் திருமணம் செய்ய முடிவு செய்யும் போது, இந்த உலகம் அறியும் வகையில் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். என் பக்கத்தை யாரோ தொடர்பில்லாத நபர்கள் திருத்த அனுமதிப்பதை விக்கிப்பீடியா நிறுத்த வேண்டும். என் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்களுக்கு நானே ஆதாரம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா, கடந்த 2021-ம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன், பவ்யா பிஷ்னோயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன், இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பிரிந்தனர்.