

யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தை சர்வதேச அளவில் திரையிட உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர் காரணமாக ரிலீஸ் தேதியை, ஜூன் 4ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். பின்னர் மீண்டும் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆக.26 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த அறிவிப்புடன், யாஷின் இரட்டை அவதாரங்களான ராயா மற்றும் டிக்கெட் ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “இப்போஸ்டர் படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப் படுத்துகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.