

மம்மூட்டி நடித்துள்ள ‘களம் காவல்’ திரைப்படம் டிச.5-ல் வெளியாக இருக்கிறது. இதில், விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிதின் ஜோஸ் இயக்கியுள்ள இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விநாயகன், பொது வெளியில் எப்படிப் பேச வேண்டும் என தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு பொதுவெளியில் எப்படிப் பேசுவது என்பது தெரியவில்லை. ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுவதில் பிரச்சினை இருக்கிறது. என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது இருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கி விடுகிறது. நான் என்ன பேசுகிறேன் என தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன்.
இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான வேடத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்கு மம்மூட்டியே என் பெயரைப் பரிந்துரைத்தது, வாழ்நாள் அதிர்ஷ்டம். அவருடன் நடிப்பது எளிதானது. வசனங்களில் அவர் நிறைய உதவினார். சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பது கஷ்டம்.
இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது. “நீங்க எதுவும் செய்ய வேண்டிய தில்லை. நான் சொன்னதை செய்தால் போதும்” என்று சொல்லி நடிக்க வைத்தார். இவ்வாறு விநாயகன் கூறினார். அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கும் விநாயகன் தமிழில் திமிரு, ஜெயிலர் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.