

பிரபாஸ், சஞ்சய் தத், ஜரினா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள இப்படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. திகில்-நகைச்சுவை வகை படமான இது, ஜன. 9-ம் தேதி தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பிரபாஸ் பேசும்போது, “நான் மாஸ் ஆக் ஷன் பொழுதுபோக்கு படங்களில்தான் நடித்து வருகிறேன். இயக்குநர் மாருதியிடம் கலர்புல்லான பொழுதுபோக்கு கதையை உருவாக்கச் சொன்னேன். அவர் இந்த திகில், நகைச்சுவை கதையை கொண்டு வந்தார். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். இது பாட்டி-பேரன் கதை. பாட்டியாக ஜரீனா வஹாப் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன், தயாரிப்பாளர் விஸ்வபிரசாத். படத்தை மூன்று வருடங்களாகப் படமாக்கினோம். திட்டமிட்ட பட்ஜெட்டை மீறினோம்.
இந்தச் சூழ்நிலையில், நாங்கள் பயந்தோம், ஆனால் விஸ்வபிரசாத் எதற்கும் பயப்படவில்லை. இந்தக் கதையின் கிளைமாக்ஸ் வேறு விதமாக இருக்கும். அந்த கிளைமாக்ஸ் காட்சியை, இயக்குநர் மாருதி, பேனாவால் எழுதினாரா, இயந்திரத் துப்பாக்கியால் எழுதினாரா என்று தெரியவில்லை.
இதற்கு முன் பார்த்திராத புதிய கிளைமாக்ஸாக அது உங்களை மகிழ்விக்கும். இப்படம் வெளியாகும் நாளில் சீனியர்கள் (சிரஞ்சீவின் மன சங்கர வரபிரசாத் காரு) படங்களும் வருகிறது. அவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அவர்கள் திரைப்படங்களும் வெற்றிபெறவேண்டும். அவர்கள் படங்களுடன் என் படமும் ஓடினால் மகிழ்வேன்” என்றார்.