60 வயதில் திருமணம்: அசாமி பெண்ணை கரம் பிடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

60 வயதில் திருமணம்: அசாமி பெண்ணை கரம் பிடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி
Updated on
1 min read

கொல்கத்தா: பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இன்று (மே 25) திருமணம் செய்துகொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள வித்யார்த்தி, ரூபாலியிடம் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார். இவர்களின் திருமணம் எளிய முறையில் வியாழக்கிழமை உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது.திருமண நிகழ்வில் ரூபாலி அசாம் மாநிலத்தின் பிரத்யேக பட்டுத் துணியாலான வெள்ளை மற்றும் தங்கநிற மேகேலா சடோர் அணிந்திருந்தார். ஆஷிஷ் வித்யார்த்தி கேரளாவின் முண்டு அணிந்திருந்தார்.

தனது 60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் குறித்து வித்யார்த்தி கூறும்போது, "எனது வாழ்வின் இந்த நிலையில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது அசாதரணமான உணர்வினைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வு நடந்தது” என்றார். தொடர்ந்து தனது ரசிகர்களுக்கான செய்தியாக, "சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆனாலும் எங்களின் திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார். ரூபாலி தொழில்முனைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 1962-ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 1986-ம் ஆண்டு தொடங்கினார். இதுவரை இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தில், கில்லி போன்றவை நடித்த குறிப்பிடத்தகுந்த படங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in