

வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷின் 75வது படத்துக்கு ‘சைந்தவ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெராமியா ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கிறார். இது அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாகும். அவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விகாஸ் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.
பான் இந்தியா படமாக உருவாகும் ‘சைந்தவ்’ இந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.