

கடந்த 2018-ல் வெளியாகி இருந்த இயக்குநர் அஜய் பூபதியின் ‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'செவ்வாய்கிழமை' என்ற தலைப்பில் அவரது அடுத்தப்படம் உருவாகிறது. 'ஆர்எக்ஸ் 100' படத்தில் நடித்த பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இந்தப் படத்தில் அஜய் பூபதி இணைந்துள்ளார்.
‘ஷைலஜா’ என்ற பெயரில் இந்த படத்தில் நடிக்கும் பாயல் ராஜ்புத் கதாபாத்திரத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியின் தோரணையும், அவரது கண்களில் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் போஸ்டரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.
சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் அஜய் பூபதி. ‘முத்ரா மீடியா ஒர்க்ஸ்’ மற்றும் ‘ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
“‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களின் கிராமத்தை மையமாக கொண்டுள்ள ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம். நம் மண்ணின் பாரம்பரிய தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரமாக உள்ளது” என இயக்குநர் அஜய் பூபதி தெரிவித்துள்ளார்.
உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஷைலஜா பாத்திரம் ரசிகர்களின் நினைவில் நீண்ட நாட்கள் நிலைக்கும் என தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தெரிவித்துள்ளனர். 'கந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்குநராக ரகு குல்கர்னி, ஒலி வடிவமைப்பு பணியை ராஜா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளராக தாசரதி சிவேந்திரா ஆகியோர் இதில் பணியாற்றுகின்றனர்.