தயாரிப்பாளர் கார் வாங்கித் தந்தாரா? - பூஜா ஹெக்டே அதிர்ச்சி
தமிழில், ‘முகமூடி’ படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. இந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் அவர், தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். இப்போது சல்மான் கான் ஜோடியாக ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தயாரிப்பாளர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்தச் செய்தி பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை வாசிக்கிறேன். சிலவற்றை என் பெற்றோர்கள் ‘இது உண்மையா?’ என்று கேட்பார்கள். அப்படி சமீபத்தில் வந்த செய்தி, படப்பிடிப்புக்கு நான் சவுகரியமாக வந்து செல்ல, தயாரிப்பாளர் ஒருவர் எனக்கு கார் வாங்கிக் கொடுத்தார் என்பது. அந்தச் செய்தியின் ஸ்கீரின்ஷாட்டை எடுத்து அவருக்கே அனுப்பினேன். அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல, எப்போது கார் தரப்போகிறீர்கள் என்று விளையாட்டாகக் கேட்டிருக்கிறேன். என்னைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வாசித்துவிட்டு கடந்துவிடுவேன். அவ்வளவுதான். இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.
