அட்டகாச நடிப்பு, அசர வைக்கும் உழைப்பு - பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?

அட்டகாச நடிப்பு, அசர வைக்கும் உழைப்பு - பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் மலையாள திரைப்படமான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார்.

வீட்டுக் கடனை அடைக்கவும், சிறிய அறை கட்டுவதற்கும் அரேபிய தேசத்திற்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்த்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு திரைவிழாக்களுக்கு படத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

ட்ரெய்லர் எப்படி? - 3 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு ஷாட்ஸும் கவனம் ஈர்க்கிறது. இரண்டு வெவ்வேறு உடலமைப்பில் பிருத்விராஜ் நடிப்பில் பிரித்திருக்கிறார். பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக அவரின் தோற்றம் அட்டகாசம். ஒரு ஷாட்டில் வெயிலின் கொடுமை தாளாமல் தண்ணீர் குடிக்கும்போது வலியை கடத்துவதாகட்டும், மனைவியை நினைத்து கதறுவது என ட்ரெய்லரிலேயே மொத்த உழைப்பும் பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும், காட்சி அமைப்புகளும் மலையாள சினிமாவின் அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளன. ட்ரெய்லரின் காரணமாக படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in