

'பறவ' படம் வெளியாகவுள்ள சூழலில், சினிமா ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஷோபின் சாகீர் இயக்கத்தில் துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் 'பறவ'. அன்வர் ரஷீத் மற்றும் ஷிஜு உன்னி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படம் தொடர்பாக துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'பறவ' படத்தைப் பார்க்கப்போகும் அனைவருக்கும், முக்கியமாக தீவிர சினிமா ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். படத்தின் காட்சிகள் எதையும் உங்கள்செல்போனில் படம் பிடிக்காதீர்கள். அது ஒரு நடிகரின் அறிமுகக்காட்சியோ, சண்டையோ, பாடலோ, எதுவாக இருந்தாலும் வேண்டாம்.
உங்கள் அன்பு மற்றும் ஆர்வத்தினால்தான் இதைச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது இணையம், சமூக வலைதளங்களில் பரவும் போது கள்ளத்தனமாக படத்தை பதிவேற்றுவதற்கு சமம் தான்.
படம் டிவிடி/ப்ளூரேவில் வரும்போது விஷயம் வேறு. யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து படம் பிடிக்காதீர்கள்.
இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.