“புலியே ரெண்டு அடி பின்னால வச்சா...” - கவனம் ஈர்க்கும் ‘புஷ்பா: தி ரூல்’ வீடியோ ப்ரொமோ

“புலியே ரெண்டு அடி பின்னால வச்சா...” - கவனம் ஈர்க்கும் ‘புஷ்பா: தி ரூல்’ வீடியோ ப்ரொமோ
Updated on
1 min read

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. ‘‘Where is Pushpa’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. பான் இந்தியா முறையில் வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அல்லு அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி முழுவீடியோவும் வெளியாகியுள்ளது.

வீடியோ எப்படி? - ‘புஷ்பா’ கொல்லப்பட்டதாக பரபரப்பாக ஊடகங்களில் பேசப்படுகிறது. தொடர்ந்து புஷ்பா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர், அரசியல்வாதிகள் தரப்பில் புஷ்பா கொல்லப்படவேண்டியவர் என கருத்து எழ, மக்கள் தரப்பில் வழக்கமான நல்லவர் பிம்பம் புஷ்பா மீது கட்டமைக்கப்படுகிறது.

“புஷ்பா செம்மரத்த கடத்தி சம்பாதிச்சாருன்னு சொன்னாங்களே அந்த பணத்த என்னா பண்ணாரு” என டீக்கடைக்காரர் பேசுகையில், ‘நாயகன்’ கதை எட்டிப் பார்க்கிறது. அடுத்து ‘என் புள்ள ஆப்ரேஷனக்கு புஷ்பா தான் ஹெல்ப் பண்ணாரு’ என ஒரு பெண் சொன்னதும் ‘புஷ்பா தி ரூல்’ என்பது அல்லு அர்ஜூனை நல்லராக காட்டும் அடுத்த பாகம் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. இறுதியில் ’ “காட்டு விலங்கு எல்லாம் ரெண்டு அடி பின்னால வச்சா, புலி வந்துருச்சுனு அர்த்தம், ஆனா அந்தப் புலியே ரெண்டு அடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்” என்ற வசனத்துடன் ‘கெத்தாக’ அல்லு அர்ஜூனின் இன்ட்ரோ ஈர்க்கிறது. வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in