"சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவு'' - நடிகர் இன்னொசன்ட் மறைவால் சோகத்தில் மலையாள திரையுலகம்

"சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவு'' - நடிகர் இன்னொசன்ட் மறைவால் சோகத்தில் மலையாள திரையுலகம்
Updated on
1 min read

மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து மலையாள திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துவந்தனர். இதனிடையே, நேற்றிரவு 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்னொசன்ட் மறைவு மலையாள திரையுலகை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. அவரின் மறைவை அறிந்த மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி மற்றும் திலீப் ஆகியோர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கொச்சி மருத்துவமனைக்கே சென்று தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அதேநேரம் ப்ரிதிவிராஜ் சுகுமாரன், "சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவு இது!" என்று உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுரேஷ் கோபியின் மகனும், நடிகருமான கோகுல் சுரேஷ், "மாற்று கொண்டுவர முடியாதது அவரின் சிரிப்பு. இன்னொசன்ட் என்றென்றும் சினிமா தொழில்துறையில் சிறந்து விளங்கிய சிறந்தவர்களில் ஒருவர்" என்று தெரிவித்துள்ளார்.

ரெசுல் பூக்குட்டி தனது பதிவில், "எங்களின் ரத்தினங்களில் ஒன்றை இழந்துள்ளோம்... இந்திய சினிமா தனது ஒளிரும் நட்சத்திரத்தையும், நமது சிரிப்பையும் புன்னகையையும் இழந்துள்ளது" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், "குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும், ஒரு காலத்தில் கேரள எம்.பியுமாக இருந்த இன்னாசென்ட்டின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். புத்திசாலித்தனமான மற்றும் திறமையான நடிகர் என்பதைத் தாண்டி, இன்னாசென்ட் ஒரு சிறந்த மனிதராக இருந்தவர். மக்களவையில் அவருடன் உரையாட நேர்ந்ததில் மகிழ்ச்சி" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பேரழிவு!! ஒரு சிறந்த நடிகரை இழந்துவிட்டோம். சிறந்த மனிதர் மட்டுமல்ல, மிகப்பெரிய லெஜெண்ட் நடிகர் இன்னாசென்ட். அவரின் மறைவால் விலைமதிப்பற்ற ரத்தினத்தை இழந்துவிட்டோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று நடிகை குஷ்பூ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in