

தசரா விடுமுறை தினங்களை ஒட்டி 'ஸ்பைடர்' வெளியாகும், மே-31ம் தேதி டீஸர் வெளியிடப்படும் என்று மகேஷ்பாபு அறிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் 'ஸ்பைடர்'. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
ராகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'ஸ்பைடர்' ஜுன் 23-ம் தேதி வெளியாகும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால், படத்தின் வெளியீட்டை ஜுன் 23-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றியது படக்குழு. ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் எதிர்பார்த்தபடி முடியாத காரணத்தால் படத்தை செப்டம்பர் வெளியீடாக மாற்றினார்கள்.
இந்நிலையில், 'ஸ்பைடர்' வெளியீடு குறித்து மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் "தசரா வெளியீடாக 'ஸ்பைடர்' வெளியாகும். படத்தின் முதற்கட்ட டீஸர் மே 31ம் தேதி மாலை 5 மணி வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ்பாபு.