தலைநகர் அமராவதியை வடிவமைக்கிறேனா? - இயக்குநர் ராஜமவுலி விளக்கம்

தலைநகர் அமராவதியை வடிவமைக்கிறேனா? - இயக்குநர் ராஜமவுலி விளக்கம்
Updated on
1 min read

தலைநகர் அமராவதியை வடிவமைக்க இருப்பதாக வெளியான செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி

தலைநகர் அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக நிர்மாணிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புகிறார். இதற்காக ஜப்பானிலும் லண்டன் போன்ற நகரங்களிலும் உள்ள புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களை தலைநகரின் வரைபடம் தயாரித்து தருமாறு ஆந்திர அரசு கேட்டுக்கொண்டது.

லண்டனைச் சேர்ந்த நார்மன் போஸ்டர் என்ற கட்டுமான நிறுவனத்தினர் அமராவதியில் இதற்கான வரைபடங்களைக் காட்டினர். இதில் சட்டப்பேரவை, உயர் நீதிமன்றம், ராஜ்பவன், தலைமைச் செயலகம், அமைச்சர்களின் வீடுகள், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இவற்றை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் ஆந்திர மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு கட்டிடக்கலை நிபுணர்கள் சிலர் மற்றும் இயக்குநர் ராஜமவுலியின் ஆலோசனையை பெறுமாறு தலைநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (சிஆர்டிஏ) அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமராவாதியை இயக்குநர் ராஜமவுலியே முழுமையாக வடிவமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.

தனது மறுப்பில் ராஜமவுலி கூறியிருப்பதாவது:

''அமராவதிக்கு நான் ஆலோசகராகவும், வடிவமைப்பாளராகவும், கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் பொய். ஃபாஸ்டர் + பார்ட்னர்ஸ் உலக அளவில் பிரபலமான கட்டிடக்கலை நிறுவனம். அவர்கள் சமர்ப்பித்துள்ள வடிவங்கள் முதல் தரத்தில் இருக்கின்றன என்பதே என் கருத்து.

முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது அணிக்கும் அதில் மகிழ்ச்சியே. ஆனால் சட்டசபைக்கான கட்டிட வடிவம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். நான் செய்வது, சந்திரபாபு நாயுடு அவர்களின் எண்ணத்தை ஃபாஸ்டர் + பார்ட்னர்ஸ்குக்கு எடுத்துரைத்து வேலையை துரிதப்படுத்துவது மட்டுமே. எனது இந்த சிறிய பங்களிப்பு, அத்தகைய பிரம்மாண்ட திட்டத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என நம்புகிறேன்'' என்று ராஜமவுலி தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in