ஸ்பைடர் அப்டேட்: பட வெளியீடு செப்டம்பருக்கு மாற்றம்

ஸ்பைடர் அப்டேட்: பட வெளியீடு செப்டம்பருக்கு மாற்றம்

Published on

ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு இணைந்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

'அகிரா' இந்தி படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.

'ஸ்பைடர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாகூர் மது, பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். ராகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால், படத்தின் வெளியீட்டை ஜுன் 23-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றியது படக்குழு.

ஆனால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் இருப்பதால் படத்தை செப்டம்பர் வெளியீடாக மாற்றியுள்ளது படக்குழு.

மேலும், படத்தின் இறுதிக்காட்சிக்கான கிராபிக்ஸ் பணிகளை கமலக்கண்ணன் மேற்கொள்ளவுள்ளார். இப்பணிகளை ரஷ்யாவில் உள்ள நிறுவனம் செய்யவிருப்பதாக கமலக்கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ்பாபு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in