

வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மலையாள படமான ‘ரோமாஞ்சம்’ (Romancham) உலக அளவில் ரூ.54 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக மலையாள சினிமா இந்திய வெளிச்சத்தை அதிக அளவில் பெற்று வருகிறது. ஓடிடியில் மலையாள சினிமாவைக் கண்டு ரசித்த மற்ற மொழி ரசிகர்கள் தற்போது நேரடியாக திரையரங்குகளுக்குச் சென்றே கண்டுகளிக்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி நீண்டுள்ளது. இதன் வரவேற்பையொட்டி மற்ற மாநில திரையரங்குகளும் மலையாள படங்களை வாங்கி திரையிட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமாஞ்சம்’. அறிமுக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்தை ஜான்பால் ஜார்ஜ், கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். காமெடி ஹாரர் பாணியில் உருவான இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.3 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில், கதையை மட்டுமே நம்பி மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.54 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் இந்தியாவில் மட்டும் ரூ.35 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய ‘லவ் டுடே’, ‘காந்தாரா’ பட வரிசையில் ‘ரொமாஞ்சம்’ தற்போது இணைந்துள்ளது. இந்தப் படம் காமெடி - ஹாரர் - த்ரில்லர் பாணியில் பெரும்பாலும் ஒரு வீட்டுக்குள் நிகழும் ரகளையான சினிமாவாக வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.