

'குயின்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னாவும், மலையாள ரீமேக்கில் நடிக்க மஞ்சிமா மோகனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளில் நீண்ட நாட்களாக 'குயின்' ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க தமிழச்சி தங்கபாண்டியன் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 மொழிகளிலுமே மனு குமரன் மற்றும் மனோஜ் கேசவன் தயாரிக்கவுள்ளார்கள். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. ஒரே சமயத்தில் 4 மொழிகளிலும் தயாரித்து, ஒரே நாளில் 4 மொழிகளிலும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும், மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான படக்குழுவை விரைவில் அறிவிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுயஅடையாளத்தை எப்படி கண்டுகொள்கிறாள் என்பதே 'குயின்' கதைக்கருவாகும்.
12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான “குயின்”, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது