

கேரள திரையுலகில் கருப்புப் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர், திரைத்துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களான அந்தோணி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் வீடுகளில் டிசம்பர் மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 17ம் தேதி நடிகர் மோகன்லாலிடமும் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் பகத் பாசில் வீட்டில் நடத்தப்பட்ட வருமானத்துறை சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. வருமானம், முதலீடுகள் குறித்து விசாரித்த அதிகாரிகள் அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ரூ.225 கோடிக்கு, கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் வருமானவரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர்கள், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் வருமானவரித் துறை விசாரணை நடத்தி வருகிறது.