

’ப்ரேமம்' படத்தின் அழகே அது என்னைப் போல குறைகள் உடையது என்பது தான் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ப்ரேமம்'. மலையாளத்தில் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.
தெலுங்கில் 'ப்ரேமம்' ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'ப்ரேமம்' இந்தி ரீமேக் குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டார்.
அப்பதிவு வருமாறு, "பாலிவுட்டிலிருந்து 5 பெரிய நிறுவனங்கள் ’ப்ரேமம்’ படத்தின் ரீமேக் உரிமைக்காக என்னை அணுகினார்கள். அதில் 2 நிறுவனங்களுக்கு கண்டிப்பாக என் படம் தேவைப்பட்டது. அவர்களிடம் அற்புதமான இயக்குநர்கள் இருப்பதாகவும், அவர்களை என்னைவிட சிறப்பாக எடுத்துத் தருவார்கள் என்றும் கூறினார்கள்.
'ப்ரேமம்' படத்தின் தனித்துவம், விசேஷத்தன்மை என்னவென்றால், திருமணம் ஆகும் வரை நான் கன்னிப்பையனாக இருந்தேன். 31 வருடங்களைக் கடந்து ஒருவர் கன்னிப்பையனாக இருந்தால் அவரால் என்னை விட 'ப்ரேமம்' படத்தை கண்டிப்பாக சிறப்பாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னை போன்ற சிறுவனால் தான் 'ப்ரேமம்’ எடுக்க முடியும். சிறந்த இயக்குநர்களால் முடியாது.
அசலை விட குறைகளின்றி, கச்சிதமாக 'ப்ரேமம்' படத்தை நீங்கள் எடுக்கலாம். ஆனால் ’ப்ரேமம்' படத்தின் அழகே அது என்னைப் போல குறைகள் உடையது என்பது தான். எனவே, யார் எனது படத்தை மீண்டும் எடுக்க முயற்சித்தாலும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கச்சிதமாக காட்சியமைக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் கதைக்களம்:
தமிழில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் கதைக்களம் குறித்து அல்போன்ஸ் புத்திரன், "இன்னும் இரண்டு மாதங்களில் எனது அடுத்த படத்தை ஆரம்பிக்கவுள்ளேன். இந்த முறை எனது படத்துக்காக நான் பயிற்சி எடுத்து தயாராகி வருகிறேன். கடலைப் பற்றி பேச வேண்டுமென்றால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நான் என் கால்களை இசைக் கடலில் நனைத்துள்ளேன். அதனால் தான் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன்.
எனக்கு நீச்சல் தெரியாது, படகோட்ட தெரியாது, சொந்தமாக கப்பல் இல்லை, கடலில் சாகசமும் செய்ததில்லை. என்னிடம் இருப்பது, லைஃப் ஆஃப் பை நாயகனைப் போல முன்னே செல்வோம் என்ற தன்னம்பிக்கை மட்டும்தான்.
இந்த கதையில் காதலும், நட்பும் இருக்கும். ஆனால் இது ’ப்ரேமம்' போன்ற காதல் கதையோ, நேரம் போன்ற நகைச்சுவை த்ரில்லரோ கிடையாது. நகைச்சுவையுடன் அனைத்து உணர்ச்சிகளும் கலந்த ஒரு எளிமையான படமாக இருக்கும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தியுங்கள். இந்த முறை எனது நண்பண் நிவின் பாலி நாயகன் அல்ல. சில படங்கள் கழித்து அவருடன் பணியாற்றலாம். என்னை, என் குடும்பத்தை, எனது நண்பர்களை நீங்கள் அனைவரும் வாழ்த்துவீர்கள், ஆசிர்வதிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி” என ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.