Published : 03 Feb 2023 09:32 AM
Last Updated : 03 Feb 2023 09:32 AM

கே.விஸ்வநாத் மறைவு | திரைக் கலைஞர்கள், தலைவர்கள், ரசிகர்கள் புகழஞ்சலி

இயக்குநர் கே.விஸ்வநாத் | கோப்புப் படம்.

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், தாதா சாகேப் விருது பெற்ற பழம்பெரும் இயக்குநருமான கே.விஸ்வநாத் மறைவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்களின் இரங்கல் செய்திகளைப் பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக கே.விஸ்வநாத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

பிரதமர் மோடி புகழஞ்சலி: பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் குறிப்பில், "கே.விஸ்வநாத் காரு மறைவால் வருந்துகிறேன். அவர் சினிமா உலகின் ஜாம்பவானாக இருந்தவர். பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. அவருடைய திரைப்படங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து சினிமா ஆர்வலர்களை ஆண்டாண்டு காலமாக ஈர்த்து வைத்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

— Narendra Modi (@narendramodi) February 3, 2023

கமல்ஹாசன் நெகிழ்ச்சி: இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவை ஒட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில். "வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை கலாதபஸ்வி விஸ்வநாத் நன்கு அறிந்திருந்தார். அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன்" என்று பதிவிட்டிருந்தார்.

சிரஞ்சீவி உருக்கம்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, "இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. காலத்தை வெல்லும் படைப்புகளை வழங்கிய அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்.

ராதிகா இரங்கல்: இயக்குநர் கே.விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து படத்தில் நடித்த நடிகை ராதிகா, "இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். கலைத்துறையிலும், அவருக்கே உரித்தான தனித்த சிந்தனையிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார். அவருடைய படைப்புகளில் ஒரு நோக்கம் இருக்கும். புயலுக்கு மத்தியில் ஓர் அமைதி அவர்" என்று பதிவிட்டுள்ளார்.

மம்மூட்டி: மலையாள திரைப்பட நடிகர் மம்மூட்டி, " கே.விஸ்வநாத் காரு மறைவால் ஆழ்ந்த துக்கம் கொள்கிறேன். அவரது இயக்கத்தில் நடித்த பெருமை எனக்குள்ளது. அவரது உறவினர்களுக்கு எனது இரங்கலை உரித்தாக்குகிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

50 திரைப்படங்களை இயக்கியவர்: ‘கலா தபஸ்வி’ என அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் 19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார்.

50 திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநராக அறியப்பட்டாலும், நடிப்பிலும் கவனம் செலுத்தினார். 2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x