

அதிக சம்பளம் கேட்கிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு, பார்வதி மேனன் கடுமையாக சாடியுள்ளார்.
கேரளாவில் உள்ள ஊடகங்கள், பார்வதி மேனன் அதிக சம்பளம் கேட்கிறார் என செய்திகள் வெளியிட்டன. இதற்கு தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்வதி.
அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"பத்திரிகைகளுக்கு,
அறத்தைக் கடைபிடிக்கிறோமா?
எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்பது பற்றி எந்த ஒரு சேனல்/இணையதளம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொண்டதாக என் நினைவில் இல்லை. அதே போல் எந்த ஒரு பத்திரிகையாளரோ, சேனலோ, மீடியா ஏஜென்சியோ என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டதும் இல்லை.
இப்படியிருக்கும் போது சில இணையதளங்கள், செய்தி சேனல்கள் நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், நான் எதற்காக என் சம்பளத்தை ‘உயர்த்துகிறேன்’ என்று அவர்கள் இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிடுகின்றனர்.
உண்மையை சரிபார்ப்பது அவ்வளவு கடினமா? ஒரு பத்திரிகை நிருபர் அடிப்படையாக எடுக்க வேண்டிய முதல் அடி இதுதானே?
உங்களிடம் செய்திகள் இல்லையா, இதைத்தான் வெறுக்கத்தக்கப் பொய்யான ‘நம்பத்தகுந்த வட்டாரங்கள்’ என்று கூறி இப்படி செய்திகளை இட்டுக்கட்டுகிறீர்களா?
நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்பது எனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள விவகாரம், மற்றவர்களுக்கு இதில் கூடுதல் அக்கறை ஏற்பட என்ன இருக்கிறது என்பதும் முற்றிலும் வேறு விஷயம். அப்படியே சம்பள வித்தியாசம் இருந்தாலும் அதனை நான் பேசினாலும் எனக்காக நீங்கள் பேச யார் உரிமை அளித்தது? சம்பள வித்தியாசம் என்பது சமூகப் பிரச்சினை, இதனை விவாதிக்க வேண்டும்.
எனவே கலைஞர்களின் சம்பளம் பற்றி போலிச் செய்திகளைத் தயாரித்து அளிப்பது மிகவும் தவறு என்பதைத் தவிர வேறில்லை. அத்தகைய அடிப்படையற்ற தவறான செய்திக் கட்டுரைகளை முதலில் நீக்கி விட்டு உங்கள் தரங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இன்னும் போய் விடவில்லை.
மக்களாகிய நாம் நேர்மையாக இருப்பது அவசியம். எங்களைப் பற்றி செய்தி எழுதும் உங்களின் மரியாதைக்குரியவரே நாங்கள். நான் கடுமையாக ஏமாற்றமடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார் பார்வதி