அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறல் - மன்னிப்புக் கேட்ட மாணவர் சங்கம்

அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறல் - மன்னிப்புக் கேட்ட மாணவர் சங்கம்
Updated on
1 min read

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அத்துமீறிய நிலையில், தற்போது அந்தக் கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அந்த மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கம்’ மலையாள படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்றது. அங்கு இயங்கிவரும் சட்டக் கல்லூரி ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் வினீத் சீனிவாசன், நாயகி அபர்ணா பாலமுரளி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்தில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு சிறிய பூங்கொத்து கொடுத்துவிட்டு, அவர் மீது அத்துமீறி கையைப் போட்டு சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா, அதிர்ச்சியில் அந்த மாணவரிடமிருந்து விலகிச் சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

சட்டக் கல்லூரி மாணவரின் செயலுக்கு படக்குழு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, நடிகை அபர்ணா பாலமுரளியிடம், அந்த மாணவர் மன்னிப்பு கேட்டுகொண்டார். மேலும் மன்னிப்புக் கேட்ட பின் அபர்ணா பாலமுரளியிடம் அந்த மாணவர் கைகுலுக்க முயன்றார். ஆனால், அபர்ணா கைகொடுக்கவில்லை. இந்நிலையில், எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில், ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in