“ஒன்றரை மணி நேரம் அழுதேன், 118 ஸ்டெப்களை முயன்றேன்...” - ‘நாட்டு நாட்டு’ குறித்து நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்

இயக்குநர் ராஜமவுலியுடன் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்.
இயக்குநர் ராஜமவுலியுடன் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்.
Updated on
1 min read

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்தது குறித்து அதன் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாட்டு நாட்டு பாடலுக்கான உருவாக்கத்தின்போது நான் வெறுமையாக இருந்தேன். இது நடக்காது என உணர்ந்த நான் வாஷ்ரூமில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டிருந்தேன். ஆனால், இயக்குநர் ராஜமவுலியின் கடினமான உழைப்பால் தான் இது சாத்தியமானது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இரண்டு ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரால் இது நடந்தது. ஏனென்றால் அவர்கள் இருவரும் சிறந்த நடனக் கலைஞர்கள். மேலும் இசையமைப்பாளர் கீரவாணியின் இசை முழு சுமையையும் குறைத்துவிட்டது.

ராஜமவுலி என்னிடம் பாடலுக்கான கான்செப்ட், அது எப்படி அரங்கேறப் போகிறது என அனைத்தையும் சொல்லிவிட்டார். ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்புக்காக எனக்கு 2 மாதங்கள் தேவைப்பட்டன. பின்னர், பாடலை ஒத்திகை பார்க்கவும் படமாக்கவும் சுமார் 20 நாட்கள் ஆனது. ஜூனியர் என்டிஆரும் சரி, ராம் சரணும் சரி மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே உள்வாங்கி கொண்டு வெளிப்படுத்தினர். காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்குத்தான் தூங்க செல்வோம். அனைவரும் பாடலுக்காக கடினமாக உழைத்தோம்” என்றார்.

இருவரின் ஸ்டைலுக்கும் ஒத்துப்போகும் வகையில் கிட்டத்தட்ட 118 வெவ்வேறு ஸ்டெப்புகளை முயற்சித்துப்பார்த்தாக கூறும் அவர், “ஒருவர் சிங்கம். மற்றொருவர் சிறுத்தையைப்போல. இருவரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால், அவர்களின் வெவ்வேறான ஸ்டைல் தான் இங்கே பிரச்சினையாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகும் பொதுவான ஸ்டைல் ஒன்றை கண்டறிய வேண்டும். அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து அனைத்தையும் உருவாக்கினோம். பொதுவாக ஒரு பாடலுக்கு 2 முதல் 3 ஸ்டெப்புகளை தான் முயற்சிப்பேன். ஆனால், இந்தப் பாடலுக்காக 118 நடன அசைவுகளை உருவாக்கினேன். தற்போது கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில், ஓர் இந்தியனாக, நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in