

நடிகை பிரியா பவானி சங்கர், தெலுங்கில் அறிமுகமாகி இருக்கும் படம், ‘கல்யாணம் கமனீயம்’. சந்தோஷ் சோமன் நாயகனாக நடித்துள்ளஇந்தப் படம் நேற்று வெளியாகி இருக்கிறது.
படம் பற்றி பிரியா பவானி கூறியதாவது: தமிழில் சில சிறந்த படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. யுவி கிரியேஷன்ஸ் நிறுவன தயாரிப்பில் நடித்தில் இன்னும் மகிழ்ச்சி. வேலை இல்லாமல் இருக்கும் கணவனுக்கும் வேலைக்குச் செல்லும் மனைவிக்குமான பிரச்சனையை பேசும் படம் இது. இதில் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். என் நிஜ வாழ்க்கைக்கும் இந்த கேரக்டருக்கும் 90% ஒற்றுமை உள்ளது. இந்த கேரக்டரை, உங்கள் சகோதரி, மகள், தாய்உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.
இது ‘ஃபீல் குட்’ படமாக இருக்கும். தெலுங்கு ரசிகர்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அடுத்து தெலுங்கில், நாக சைதன்யாவுடன் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளேன். சத்யதேவின் 26 வதுபடத்தில் நடிக்க இருக்கிறேன். இன்னும் சில தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.