ஆஸ்கர் ரேஸில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வாய்ப்பு எப்படி?

ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் போஸ்டர்
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் போஸ்டர்
Updated on
2 min read

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தது. இந்தச் சூழலில் அந்தப் பாடல் மற்றும் படத்திற்கான ஆஸ்கர் விருது வாய்ப்பு குறித்து பார்ப்போம்.

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்நடித்த திரைப்படம், ‘ஆர்.ஆர்.ஆர்’. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் இந்தியா முழுவதும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. ரூ.1,100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைத்து இருந்தார். அவர் இசையில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலும் அதற்கான நடனமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம், பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் விருதுகளை பெற்று வருகிறது. தற்போது ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் இது. கீரவாணி இந்த விருதைப் பெற்றார்.

ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். கீரவாணி பேசும்போது, “இந்த விருது எனக்கானது அல்ல.இயக்குநர் ராஜமவுலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. பிரேம் ரஞ்சித், காலபைரவா, சந்திரபோஸ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட அனைவருக் கும் நன்றி” என்று தெரிவித்தார்.

இந்த விருது கிடைத்ததை அடுத்து படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “மிகவும் சிறப்பான சாதனை இது. ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்,ரஜினிகாந்த் உட்பட பலரும் இசைஅமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பு எப்படி? - அமெரிக்காவில் இப்போது மக்களின் அதீத வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஆர்ஆர்ஆர். அதன் வெளிப்பாடுதான் நியூயார்க் சினிமா விமர்சகர் வட்டத்தில் சிறந்த இயக்குநர் விருதை இந்தப் படம் பெறக் காரணம். இப்போது கோல்டன் குளோப் விருதின் வருகை ஆஸ்கருக்கான ரேஸில் மேலும் அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்று துவங்கி வரும் 17-ம் தேதி வரையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் பரிந்துரையில் இடம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. வரும் 24-ம் தேதி ஒவ்வொரு பிரிவிலும் இடம்பிடித்துள்ள சிறந்த படைப்புகளின் பரிந்துரைகள் வெளியாக உள்ளன. இந்தப் பரிந்துரையில் ஆர்ஆர்ஆர் இடம்பெறவில்லை என்றால்தான் அது ஆச்சரியம் கொடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு பார்வையாளர்கள் மற்றும் அகாடமி விருதுகளுக்கு வாக்களிக்கும் மக்களையும் கவர்ந்துள்ளதாம் இந்தப் படம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆர்ஆர்ஆர்-க்கு கொண்டாட்டம் களைகட்டி வருகிறதாம்.

“சிறந்த படத்திற்கான விருதை ஆர்ஆர்ஆர் வெல்லும்” என ப்ளம் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஜேசன் ப்ளம் ட்வீட் செய்துள்ளார். இப்படியாக ஹாலிவுட் வட்டாரத்திலும் ஆர்ஆர்ஆர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கோல்டன் குளோப் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான விருது வாய்ப்பு சிறக்காக உள்ளது என கணிக்கப்படுகிறது. வரும் 24-ம் தேதி அன்று வெளியாகும் பரிந்துரைப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் இடம் பிடிக்கும் என நம்புவோம். அது இந்திய சினிமா துறைக்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in