

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை இழந்த நாளில் சென்னை மக்களின் மனநிலையையும் அணுகுமுறையையும் அனுபவபூர்வமாக வியந்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியிருக்கிறார் வினித் ஸ்ரீனிவாசன்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் தனக்கு கிடைத்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம்:
"ஒரு முக்கிய நகரத்தின் மக்கள், புகழ்பெற்ற அரசியல் தலைவர் இறந்தவுடன் கட்டாயமாக முடக்கப்பட்டதைப் பற்றி படித்திருக்கிறேன். முழு அடைப்பை கொண்டு வர வாகனங்கள் சேதமாகின. பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர். மரியாதை என்பது வன்முறையால கேட்டு வாங்கப்பட்டது. ஆனால் நேற்று சென்னையில், நமது அன்பார்ந்த முதல்வர் காலமானதையொட்டி, வன்முறையால், பயத்தால் நகரம் முடங்கவில்லை. மரியாதையால் மட்டுமே கடைகள் அடைக்கப்பட்டன.
நான் எனது காரை எடுத்துக் கொண்டு வெளியே போக வேண்டிய சூழல் நேற்றிரவு உருவானது. இது மற்ற நகரங்களில் பாதுகாப்பற்ற சூழலாக இருந்திருக்கலாம். சென்னையில், நான் வெளியே சென்றபோது, வெகு சில மக்களே சாலையில் இருந்தனர். தெரு முனைகளில் காவல்துறை கூட இல்லை. கும்மிருட்டு, கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் நான் பார்த்த மக்கள் அமைதியாக இருந்தனர். வன்முறை அல்ல, சோகம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. ஆட்டோ நிறுத்தங்களில் அந்த அற்புதமான பெண்மணியின் படம் வைக்கப்பட்டு, கற்பூரம், ஊதுபத்தி ஆகியவை ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டிருந்தது.
95 சதவித கடைகள் மூடப்பட்டிருந்தாலும், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், ஒரு சில மளிகைக் கடைகள் திறந்திருந்தன. சாமானியனின் தேவைகளுக்கு இன்னும் இந்த நகரத்தில் அதிக மதிப்பு இருக்கிறது என்றே உணர்ந்தேன்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இறுக்கமான சூழலிலும் சென்னையின் நடத்தை எனக்குப் பிடித்திருந்தது. இங்கிருக்கும் மக்கள் அமைதியான, பொறுமையான, மரியாதையானவர்கள். எனக்கு இந்த நகரம் நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. இன்றும் என் ஆசானாக உள்ளது" என்று இயக்குநர் வினித் சீனிவாசன் கூறியுள்ளார்.