‘காந்தாரா’ குறைந்த பட்ஜெட் படமல்ல - ரிஷப் ஷெட்டி கொந்தளிப்பு

‘காந்தாரா’ குறைந்த பட்ஜெட் படமல்ல - ரிஷப் ஷெட்டி கொந்தளிப்பு
Updated on
1 min read

“‘காந்தாரா’ குறைந்த பட்ஜெட் கொண்ட படமல்ல; என்னைப் பொறுத்தவரை, அது பெரிய பட்ஜெட் படம்தான்” என்று ‘காந்தாரா’ பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பட்ஜட் குறித்து அண்மையில் ‘ட்ராக் டோலிவுட்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, “என்னுடைய முந்தையப் படம் ‘காந்தாரா’ பட்ஜெட்டில் 10 சதவீதம்தான். ஆகவே, அதை ஒப்பிடும்போது ‘காந்தாரா’ எனக்கு மிகப் பெரிய பட்ஜெட் படம்” என்று தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் மகத்தான வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது என்கிற ரீதியில் ‘காந்தாரா’ பற்றி பேசப்பட்டு வருவதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே ரிஷப் ஷெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் ‘காந்தாரா’ படத்தை பாராட்டியிருந்தார். ஃபிலிம் கம்பேனியனுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த ஆண்டின் அவருக்கு விருப்பமான படம் குறித்த கேள்விக்கு, “கந்தாரா ஒரு சிறந்த உதாரணம். நானும் கன்னட திரையுலகைச் சேர்ந்தவன் என்பதால் மகிழ்ச்சியுடன் இதைக் கூறுகிறேன். தற்போது கன்னட சினிமாவில் பலரும் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ‘வம்ச விருட்சம்’, ‘ஒன்டனொன்று காலதள்ளி’, ‘காடு’ போன்ற படங்களை கொடுத்த நிலம்.அந்த நாட்கள் திரும்பி வருகின்றன, அதைத்தான் நான் உணர்கிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in