

பிரபல மலையாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வை குறைபாடுடைய பாடகியான இவர், ‘குக்கூ’ படத்தில் ‘கோடையில மழைபோல’, டி இமான் இசையில் ‘வீர சிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி நான்தானே’ உட்பட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இவர் 2018-ம் ஆண்டு அனூப் என்கிற மிமிக்ரி கலைஞரை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த வருடம் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது விவாகரத்து பற்றி பேசியுள்ளார். அதில், “என் கணவர் எப்போதும் என் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவார். என்னை பாட்டுப்பாடக் கூடாதுஎன்று சொன்னார். அவர் ஒரு சாடிஸ்ட் என்றுதான் சொல்ல முடியும். அவர் பாடக்கூடாது என்று சொல்லும்போது அழுதுகொண்டே இருப்பேன். அப்பா, அம்மாவைப் பிரித்தார்.
ஒருகட்டத்திற்கு மேல் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. பாடல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. பல்லில் வலி என்றால் கொஞ்சம் பொறுத்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் வலி அதிகமானால், அதைப் பிடுங்கிவிடுவோம்தானே. அப்படித்தான், அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று அப்பா, அம்மாவுடன் சென்றுவிட்டேன். என் வாழ்க்கை எனக்கு முக்கியம். மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன?” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.