

சென்னை: தன்னைப் பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வருவதாக நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டின் வேலை செய்த முன்னாள் பணியாளர் மீது போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். ‘உத்தமவில்லன்’, ‘கோடிட்ட இடங்களை ‘நிரப்புக’, ‘நிமிர்ந்து நில்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களிலும் பார்வதி நாயர் நடித்துள்ளார்.
இவர் கடந்த அக்டோபரில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தபோது என் வீட்டிலிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், லேப்டாப் மற்றும் செல்போன், கேமரா, விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர் மீது தான் சந்தேகம் உள்ளது'’ என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்திருந்தனர்.
இரவு மது விருந்து: அதேநேரத்தில் பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அளித்த புகாரில், ‘‘பார்வதி நாயர் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் மது விருந்து நடத்தியபோது, நான் பார்த்துவிட்டதால் என் மீது கோபம் ஏற்பட்டது. அதனால், என் மீது வீணாக பழிசுமத்துகிறார்’’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இரு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் நேற்று முன்தினம் அளித்த மற்றொரு புகாரில், ‘என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களை சுபாஷ் சந்திரபோஸ் கூறி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.