நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சிறப்பு நன்றி - ‘கோல்டு’ படம் குறித்து அல்போன்ஸ் புத்திரன்

நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சிறப்பு நன்றி - ‘கோல்டு’ படம் குறித்து அல்போன்ஸ் புத்திரன்
Updated on
1 min read

“‘கோல்டு’ படம் குறித்தான எதிர்மறை விமர்சனங்களுக்கு சிறப்பு நன்றிகள்; உங்கள் நேரத்தை வீணாக்க நாங்கள் நினைக்கவில்லை” என படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

‘பிரேமம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் புதிய மலையாள படம் ‘கோல்டு’. பிரித்விராஜ், நயன்தாரா நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் தொடங்கி படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின. இந்நிலையில், படம் குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “கோல்டு படம் குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களைப் பார்க்கிறேன். படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை எழுதியவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேநீர் சரியில்லை என்றால் அது நன்றாக இருக்கிறதா? இல்லையா? அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதன் மூலம் டீயை தயாரித்தவர் அடுத்த முறை திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அப்படியில்லாமல் வெறுமனே அது மோசமான தேநீர் என முத்திரை குத்தினால் அதில் ஈகோ மட்டுமே வெற்றிபெறும். அதில் இரண்டு தரப்பினருக்குமே எந்தப் பயனும் இருக்காது.

எனது படத்திற்கு நான் ‘பிரேமம் 2’ என்றோ, ‘நேரம் 2’ என்றோ பெயர் வைக்கவில்லை. மாறாக அதற்கு ‘கோல்டு’ என்று தான் பெயரிட்டுள்ளேன். நானோ அல்லது எனது படக்குழுவினரோ உங்கள் வெறுப்பை சம்பாதிக்கவோ அல்லது உங்கள் மதிப்புமிக்க பொன்னான நேரத்தை வீணாக்கவோ முயற்சிக்கவில்லை. தயவு செய்து என்னையும், ‘கோல்டு’ படக்குழு உறுப்பினர்களையும் சந்தேகிக்க வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in