

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியானது. அண்மையில் படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில், படம் வெளியாகி இன்னும் 7 நாட்களில் இரண்டு மாதங்கள் கடக்க உள்ள நிலையில், படம் இதுவரை உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் உலகம் முழுக்க படம் ரூ.400 கோடியை வசூலித்துள்ளது.
இதனிடையே, காந்தாரா படம் நாளை (வியாழக்கிழமை) ஓடிடியில் வெளியாகவுள்ளது. அமேசான் பிரைமில் நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்க முடியும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.