

சென்னை: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கோல்டு’ திரைப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘பிரேமம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளிவர உள்ள அடுத்த படம் இது.
இதில் நடிகர்கள் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஓணம் பண்டிகை அன்று இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீடு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. “இந்தப் படம் ‘நேரம்’, ‘பிரேமம்’ போன்றது அல்ல. இது வேறு மாதிரியான திரைப்படம். சில நல்ல கதாபாத்திரங்கள், நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சில நகைச்சுவையுடன் எனது மூன்றாவது படம் இருக்கும்” என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
எப்படியும் படம் இரண்டு வாரங்களுக்கு மேல் திரை அரங்குகளில் ஸ்க்ரீன் செய்யப்படும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ‘நேரம்’ படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அல்போன்ஸ் புத்திரன் அறிமுகமானார்.