

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவையடுத்து, அவரது மகன் மகேஷ்பாபு நினைவு இல்லம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், முன்னாள் எம்பியும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, நவம்பர் 15-ம் தேதி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல், 16-ம் தேதி காலை, நடிகர் கிருஷ்ணாவுக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, சரத்குமார், நடிகை ஜெயப்பிரதா, வரலட்சுமி உள்ளிட்ட பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடிகர் கிருஷ்ணாவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேன் மூலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரளான ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கு அரசு மரியாதையுடன் நடிகர் கிருஷ்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தைக்கு நினைவு இல்லம் ஒன்றை கட்ட, அவரது மகன் மகேஷ்பாபு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நடிகர் கிருஷ்ணா பெற்ற விருதுகள், கடிதங்கள், திரைப்பட போஸ்டர்கள், தேசிய விருது, பதக்கம் மற்றும் அவரது தனிப்பட்ட பொருட்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும், நினைவிட நுழைவாயிலில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் சிலையை நிறுவ மகேஷ்பாபு திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.