

“என் உடல் நிலை குறித்து நான் கூறவில்லை என்றால்தான் அது தவறு” என நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார்.
ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் சமந்தா கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், “இந்தப் படத்தின் கதைக்களம்தான் என்னை இப்படத்தை தேர்வு செய்ய வைத்தது. படத்தின் கருவே வாடகைத் தாய் கிடையாது. கதையில் அதுவும் கூறப்பட்டுள்ளது அவ்வளவுதான். வாடகைத் தாய் பற்றிய என் கருத்து என்னவென்று கேட்டால், நிச்சயம் எனக்கு இதில் எந்தக் கருதும் இல்லை. இறுதியில் எல்லாரும் மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதனை செய்யட்டும்.
நான் ஆக்ஷன் சீன்களில் நடிப்பேன் என என்றுமே நினைத்ததில்லை. ‘யசோதா’ படத்தில் சிறப்பான சண்டைக் காட்சிகள் உள்ளன. திரையரங்குகளில் அவற்றை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இப்படத்தில் சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நான் பணிபுரிந்துள்ளேன்.
நான் எப்போது ரசிகர்களின் பார்வையிலிருந்துதான் கதை கேட்பேன். அதன் அடிப்படையில் நிச்சயம் ‘யசோதா’ அனைவருக்கும் பிடிக்கும். ஆச்சரியமான த்ரில்லர் படமாக இது இருக்கும்” என்றார்.
உடல்நிலை குறித்து அவர் கூறும்போது, “சில நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். சில நாள் உங்களுக்கு கெட்டதாக அமையலாம். சில நாட்கள் உங்களால் படுகையிலிருந்து கூட எழ முடியாத நாளாக இருக்கும். நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒன்றை நான் தெளிப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த நேரத்திலும் இறக்கும் நிலையில் இல்லை. சில பத்திரிகைகள் நான் இறப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகின்றனர். இதில் உண்மை இல்லை. நான் குணமாக சில காலம் தேவைப்படும். நான் நிச்சயம் என் நோயை எதிர்த்து போரிடுவேன்” என்றார்.
உங்களது நோயை வெளிப்படையாக கூற காரணம் என்ன என்ற கேள்விக்கு, “கூறவில்லை என்றால்தான் அது தவறு. வெறும் எனது ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே பொது வெளியில் காண்பிக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் நல்ல காலமும் உண்டு. கெட்ட காலமும் உண்டு என்பதை தெரிவிக்க விரும்பினேன்” என்றார் சமந்தா.