

‘கே.ஜி.எஃப் 2’ படம் ரூ.1207 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருக்கிறது. இதில் நடித்த யாஷ் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய யாஷ், தென்னிந்திய படங்களை மக்கள் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: 10 வருடங்களுக்கு முன் தென்னிந்திய படங்களை, வட இந்தியாவில் கேலி செய்வார்கள். பிறகு கலை வடிவத்தைப் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். தென்னிந்திய திரைப்படங்கள் மிகக் குறைந்த விலைக்கு அங்கு விற்கப்பட்டன. மோசமாக டப் செய்து, வேடிக்கையான பெயர்களுடன் வெளியிட்டார்கள். அதை ‘பாகுபலி; மூலம் மாற்றியவர் இயக்குநர் ராஜமவுலி. அவருக்கு நன்றி. நீங்கள் ஒரு பாறையை உடைக்க வேண்டும் என்றால், தொடர்ச்சியான முயற்சி தேவை. ‘பாகுபலி’ அந்த உத்வேகத்தைக் கொடுத்தது. ‘கே.ஜி.எஃப்’ வித்தியாசமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட படம். இப்போது வட இந்தியாவில் தென்னிந்திய படங்களைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு யாஷ் தெரிவித்துள்ளார்.