''100 கோடி வந்தாலும் இனி விஷ்வக் சென் உடன் பணிபுரிய மாட்டேன்'' - நடிகர் அர்ஜுன் உருக்கம்

''100 கோடி வந்தாலும் இனி விஷ்வக் சென் உடன் பணிபுரிய மாட்டேன்'' - நடிகர் அர்ஜுன் உருக்கம்
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் அர்ஜுன். இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். இதில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான விஷ்வக் சென் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாயகியாக தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டார் அர்ஜுன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதில், “எனது மகளை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்தப் படத்தைத் தொடங்கினேன். நான் கதையைச் சொன்னதும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஷ்வக் சென். அவர் கேட்ட சம்பளத்தை நாங்களும் தர சம்மதித்தோம். இருப்பினும், ஜெகபதி பாபு போன்ற மற்ற மூத்த நடிகர்களுடன் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரை பலமுறை தொடர்புகொண்டும் பதில் வரவில்லை. என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை தொடர்புகொண்டது இல்லை.

பெரிய ஸ்டாராக இருந்தும் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தொழில் ரீதியாக மிக அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள். ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக் சென்னிடம் இல்லை. இப்படி ஒரு விரோதமான சூழலில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைப்பேன். எனினும் விஷ்வக் சென் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினேன். அந்த அளவுக்கு என்னையும் எனது குழுவையும் அவர் மதிக்கவில்லை. 100 கோடி வந்தாலும் இனி அவருடன் பணிபுரிய மாட்டேன்" என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in