திரையரங்கில் நிர்மலா சீதாராமன்
திரையரங்கில் நிர்மலா சீதாராமன்

‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

Published on

பெங்களூரு: விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் புதன்கிழமை பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சில நலன் விரும்பிகள், தன்னார்வலர்களுடன் இணைந்து நேற்றிரவு காந்தாரா திரைப்படத்தைப் பார்த்தேன். துளுவநாடு மற்றும் காரவல்லியின் பாரம்பரியத்தை அதன் வளத்தோடு படமாக்கியுள்ளீர்கள். எழுதி, இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கருத்தியல் ரீதியில் எதிர் விமர்சனங்களையும் கொண்ட ‘காந்தாரா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in