

''சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று ராஜராஜேஸ்வரியிடமும், அல்லாவையும், ஏசுவையும் கேட்டுக் கொள்கிறேன்'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் 45 வயதில் உயிரிழந்தது கன்னட திரைத் துறையை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகராக மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது உள்ளிட்ட சமூக சேவையிலும் ஈடுபட்டதால் கன்னட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புனித் ராஜ்குமார். அவரது மறைவையடுத்து, புனித்துக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். இதையடுத்து அவருக்கு விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கு விதான் சவுதாவில் நடைபெற்றது. இதில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார். அப்போது, சிறப்பு அழைப்பாளர்களான நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று ராஜராஜேஸ்வரியிடமும், அல்லாவையும், ஏசுவையும் கேட்டுக் கொள்கிறேன். ‘அப்பு’ கடவுளின் குழந்தை. அந்த குழந்தை நம்முடன் சில நாட்கள் தங்கி விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தி மீண்டும் கடவுளிடம் சென்றுவிட்டது. தற்போது மழை பெய்து வருகிறது. அதனால் அதிகம் பேச முடியாது. மற்றொரு நாள் வந்து அப்புவைப் பற்றி பேசுகிறேன். புனித்துக்கு விருது வழங்கிய கர்நாடக அரசுக்கு அனைத்து ரசிகர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.