புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பு

புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பு
Updated on
1 min read

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட உள்ளதையொட்டிய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றடைந்தார்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் 45 வயதில் உயிரிழந்தது கன்னட திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகராக மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது உள்ளிட்ட சமூக சேவையிலும் ஈடுபட்டதால் கன்னட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புனித் ராஜ்குமார்.

அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கு விதான் சவுதாவில் நடக்கிறது. நிகழ்ச்சியில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்குகிறார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி தனி விமானம் மூலமாக பெங்களூரு வந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார். கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in