

'காந்தாரா' படத்தில் இடம்பெற்றுள்ள 'வராஹ ரூபம்' பாடலை தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியில்லாமல் திரையரங்குகளிலோ, மற்ற தளங்களிலோ ஒளிபரப்ப கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முதலில் கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘காந்தாரா’ திரைப்படம், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ‘வராஹ ரூபம்’ பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்துக்காக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த பிரபல ‘தைக்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு தங்களது ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி வருகிறது. ‘96’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் அவருடைய நண்பர்களும் இக்குழுவை நடத்திவருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இப்பாடலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாக ‘நவரசம்’ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டியிருக்கும் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதில், “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக காந்தாரா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எங்களது பாடலின் காப்புரிமையைப் பாதுகாக்க ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 'வராஹ ரூபம்' பாடலை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் யாரும் அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களிலும், திரையரங்குகளிலும் பாடலை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள தைக்குடம் ப்ரிட்ஜ் இசைக்குழு, இந்த கடினமானப் பயணத்தில் தங்களுக்குத் துணை நின்ற அனைவருக்கும் தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.